செவ்வாய், 12 ஜூலை, 2016

போராளி பால்ராஜ்

என்னையும் விஞ்சிய போராளி

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான்.

அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு?

காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்.

அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள்.

சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ… என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கில மும் கலந்து உடைக்கிறார். “”பயப்படாதீர்கள் பால்ராஜ்… “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போ தேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?” என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டையை “ஹாலிவுட்’ திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.

அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன்: கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி ராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 ராணுவத்தினர், வடமேற் கில் பளை ராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 ராணுவத்தின ருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 ராணுவத் தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயு தங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்ட வெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் “ப’, “ட’ வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் “குடாரப்பு-பாக்ஸ் சண்டை” என்கிறார்கள்… அப்படி “ப’ “ட’ வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து A9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறு ரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளி கள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 ராணுவத் தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள்-3ன் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: “”திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை”. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார்.

எளிய மனிதனாய், சாரம் கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். “”சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே…?” என்றேன். சிரித்தார். “”பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட்டால் போர்க்களத்தில் சுகம்” என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பிலேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதிவைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

“இத்தாவில்”, “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்” என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

“”மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி “பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வத்திராயன் -குடாரப்பு பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா’ என்றார். (“ரெக்கி’ என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வத்திராயன்,குடாரப்பு பகுதிக்கு ராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். “கவனமா பார்த்து வா பால்ராஜ்… யாழ்ப் பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்’. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ”.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் 3 நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். “”பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ’ என்றார். “”நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோதனைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ A9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீரனென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து 9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியிலிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்” என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளி களையும் தளபதி பால்ராஜையும் தாளையடி-குடாரப்பு- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும்போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். “”இறங்கேக்கெயே கடும் சண்டை… சக்கை அடி அடிச்சான்… நாங்கள் மெதுவா நகர்ந்து வத்திராயனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத்தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை… வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்… விமானத்தாலெ அடிப்பான்… டாங்கு கொண்டு அடிப்பான்… எறிகணை அடிப்பான்…”

“”என்ட ராசா… பழைய தமிழ் இலக்கியங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், “இன்டு போய் நாளெ வா’ என்டு… அதுபோலத்தான் வத்திராயன் சண்டையும். வத்திராயன் இண்டைக்கு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப்பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள்ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்… நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்குகளெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த் திருப்பிங்கதானே… அப்பிடித்தான் சண்டை நடந்தது.”

“”ரெண்டுநாள்… எட்டுநாள்… பத்துநாள்… சப்ளை துப்புரவா இல்லாத நிலை… கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது… சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்… என்ட ராசா… சண்டையென்டா இதுதான் சண்டை…” -அப்படியொரு ரசனையுடன் வத்திராயன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வத்திராயனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் A9 நெடுஞ்சாலையை இடைமறித் தார்கள். பல்லாயிரம் ராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள ராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். A9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதி யையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப் பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் குடாரப்பில்தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப் பாட்டில் வந்தது.

பிரபாகரனும் பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபா கரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால் ராஜையே பார்த்தவர்… “”என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக் கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு “வாக்மேன்’ (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போ தைய ராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக் கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென் னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கு மென்ற அச்சத்தில் பலாலி ராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் ராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். “”வேசி மகன்களே… 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டை யிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு ராணுவமா? த்தூ…” இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் : “”ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாகூட சமாளிச் சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது” -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். “”உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வென்டுட்டெ பால்ராஜ்” என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் 1-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் 2-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி ராணுவ முகாமை துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனையிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட “அக்னிஹேலா’ பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ் 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரண மடைந்தார். பணமும் மனமுடைய தமிழர் எவரேனும் இம்மாவீரனை திரையில் பதிவு செய்வீர்களா?

நினைவுப்பகிர்வு:- வண.பிதா ஜெகத்  கஸ்பார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

சனி, 28 மே, 2016

தோழர் தமிழரசன்

தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலின் ஒரு பகுதி அகழி(www.akazhi.com)இணையத்தில் பதிவு செய்துள்ளோம்!

01.09.1987ம் நாள். அப்போது நான் சென்னையில் இருந்தேன். மாலைப் பத்திரிகைகளில்தான் அந்த செய்தியை முதன் முதலாக பார்த்தேன். பொன்பரப்பியில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற ஜந்;துபேர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்தி போடப்பட்டிருந்தது. பணத்தேவைக்காக வங்கியை கொள்ளையடிக்கப்போவதாக தோழர் தமிழரசன் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் எப்போது? எப்படி? எந்த வங்கியை? கொள்ளையடிப்பது என்ற விபரங்களை அவர் என்னிடம் கூறியிருக்கவில்லை. நாமும் அந்த விபரங்களை சம்பவத்திற்கு முன்னர் கேட்க விரும்புவதில்லை. எனவே இந்த செய்தியை பத்திரிகையில் படித்தவுடன் பெரும் அதிர்ச்சியாகவும் எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து குழப்பமும் எனக்கு ஏற்பட்டது. இப்போதுபோல் அந்த காலத்தில் கைத்தொலைபேசியோ அல்லது விரைவான தகவல் தொடர்பு வசதிகளோ எதுவும் எம்மிடம் இருக்கவில்லை. எனவே நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக  விபரம் எதுவும் அறியமுடியாமல் தவித்தேன்.

சம்பவம் நடந்து இரு நாட்களின் பின்னர் தோழர் தமிழரசனுடன் கூட இருந்த எமது தோழர் ஒருவர் வந்தார். அவர் மூலமே ஒரளவு விபரங்களை என்னால் பெற முடிந்தது. அந்த எமது தோழரின் பெயர் திணேஸ். அவர் ஈழத்தவர். எமது “பேரவை” அமைப்பை சேர்ந்தவர். சுறுசுறுப்பானவர். குறிப்பாக நல்ல ஒரு டிறைவர். அதனால் தமது தாக்குதல் சம்பவங்களிற்கு உதவியாகவும் ஆலோசனைகளை பெறவும் அவரை தோழர் தமிழரசன் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். தோழர் தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு தாக்குதல் முதல் பல சம்பவங்களுக்கு எமது தோழர் திணேஸ் பெரிதும் உதவியிருக்கிறார். இவரது பங்களிப்பை தெரிந்துகொண்ட கியூ பிரிவு உளவுத்துறை பொலிஸ் இவரையும் பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்தின்போது கொல்வதற்கு திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் இவர் அந்த சம்பவத்தில் பங்கு பற்றாததால் அவர்களால் இவரையும் அதில் கொல்ல முடியாமற்போய்விட்டது . எனவே பின்னர் அவரையும் பிடித்து கொல்வதற்காக மிகவும் மும்முரமாக தேடினார்கள். இந்த ஆபத்தான நிலையிலேயே அவர் தப்பி சென்னை வந்தார். அவர் தொடர்ந்தும் இந்தியாவில் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்தாகும் என்பதால் எமது தோழர்கள் அவரை உடனே இரகசியமாக இலங்கைக்கு படகு மூலம் அனுப்பி வைத்தார்கள்.

ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில் கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள் என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல கோயில்களிலும்கூட கொள்ளையடித்தன. ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன் தன் குழுவினருடன் தப்பி சென்றார்.

இவ்வேளையில் தமிழகத்தில் தங்கியிருந்த ஈழப் போராளி அமைப்பு ஒன்றிடம் புலிகள் இயக்கத்தை அழிக்குமாறு கோரி பெருமளவு ஆயுதங்கள் இந்திய உளவு அமைப்பு "றோ" வினால் வழங்கப்பட்டது. அந்த ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட அந்த அமைப்பின் பொறுப்பான மூன்று நபர்களுக்கு அதனை புலிகளுக்கு எதிராக பயன்படுத்துவதில் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் தங்களை வைத்து புலிகளை அழிக்க இந்திய உளவு அமைப்பு போடும் திட்டத்திற்கு ஒத்துழைக்க விரும்பவில்லை. அதனால் அந்த ஆயுதங்களை இரகசியமாக எமது அமைப்பிடம் ஒப்படைக்க விரும்பினார்கள். அதற்கு மாறாக தங்கள் மூவரையும் பாதுகாப்பு கருதி ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டார்கள். அந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டால் உடனடியாக இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்குரிய வசதி அப்போது எமது அமைப்பிடம் இருக்கவில்லை. எனவே நாங்கள் அந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதனை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் தான் அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்குரிய பணத்தை எற்பாடு செய்வதாகவும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான அந்த ஆயுதங்களை எப்படியாவது தமக்கு பெற்றுத் தருமாறு கேட்டார்.

அந்த மூன்று நபர்களையும் வெளிநாடு அனுப்புவதற்கு அப்போது மூன்று லட்சம் ரூபா தேவைப்பட்டது. இதனை தனக்கு தெரிந்த பலரிடம் கூறி பணத்தை திரட்டித் தரும்படி தோழர் தமிழரசன் கேட்டார்.  ஆனால் அவர் எதிர்பார்த்தபடி உடனடியாக அந்த தொகையை திரட்ட அவர்களால் முடியவில்லை. எனவேதான் வேறு வழியின்றி அவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்றார். அவர் காவிரிப் பிரச்சனைக்காக கிருஸ்ணாசாகர் அணைக்கட்டை உடைப்பதற்கு தேவையான வெடி மருந்தை வாங்குவதற்காகவே வங்கியை கொள்ளையடிக்க முயன்றதாக சிலர் கூறுகிறார்கள். அது தவறான தகவல் ஆகும்.

தோழர் தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொண்ட உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி அவரையும் அவருடன் கூடச் சென்ற தோழர்களையும் கொன்று குவித்தனர். தோழர் தமிழரசன் கொல்லப்படும்போது அவர் கையில் நிரம்பிய தோட்டாக்களுடன் சப் மிசின்கன் என்னும் இயந்திர துப்பாக்கி இருந்தது. அவர்கூடச் சென்ற தோழர்களிடமும் துப்பாக்கி ஆயுதங்கள் இருந்தன. அதைவிட பயங்கரமான கிரினைட் வெடி குண்டுகளும் அவர்களிடம் இருந்தன. தோழர் தமிழரசன் நினைத்திருந்தால் ஒரு கிரினைட் குண்டை வீசியிருந்தாலும்கூட அவர் தப்பிச் செல்லுவதற்குரிய பாதை கிடைத்திருக்கும். அன்றாடம் காய்ச்சி முதல் அகிம்சா மூர்த்திகள் வரை யார் கையில் அந்த துப்பாக்கி இருந்திருந்தாலும் அது நிச்சயம் சீறியிருக்கும. ஆனால் அவரோ தன் கையில் இருந்த இயந்திர துப்பாக்கியை இயக்காதது மட்டுமல்ல தன் தோழர்களையும் அவர்கள் கையில் இருந்த துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.

தான் செத்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னால் மக்கள் சாகக்கூடாது என்ற நினைத்து தோழர் தமிழரசன் தன் கையில் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தாமல் விட்டமைக்கு அவர் மக்களை நேசித்தது மட்டும் காரணமில்லை. எற்கனவே அவர் மேற்கொண்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை காரணமாக 35 மக்கள் மரணமடைந்த பழி அவர்மீது விழுந்திருந்தது. இது அவர் மனதை பெரிதும் பாதித்திருந்ததும் இன்னொரு காரணமாக இருந்தது. அரியலூரில் மருதையாற்று பாலத்திற்கு அவர் வைத்த வெடிகுண்டையடுத்து அந்த மக்கள் பலியாகியிருந்தார்கள். உண்மையில் இந்த விடயத்தில் அவர் தவறு இழைக்கவில்லை. இருப்பினும் பழி அவர் மீது சுமத்தப்பட்டது.
இந்திய அரசு ஈழப் போராட்டத்தை நசுக்குவதை உணர்ந்துகொண்ட தோழர் தமிழரசன்  தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி 1986ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார். “மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி!” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் முன்வைத்தார். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்தது. இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏ.சி கம்பாட்மென்டில் இருந்த 35 பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பரபரப்பான செய்தியானது.

உண்மையில் அன்று நடந்தது என்னவென்றால் தோழர் தமிழரசன் தலைமையில் சென்ற தமிழ்நாடு விடுதலைப் படையினர் மருதையாற்று பாலத்தை குண்டு வைத்து தகர்த்துவிட்டு தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை அருகில் ஒட்டியிருந்தனர். பின்னர் அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று தாம் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து விட்டதையும் எனவே ரயில் சேவையை நிறுத்தும்படி எச்சரித்துவிட்டு சென்றனர். அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி உடனே சென்னை உட்பட பல தலைமையிடங்களுக்கு இந்த செய்தியை அனுப்பினார். ஆனால் பல தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு வந்தது. இது அந்த அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த ரயில் டிரைவரிடம் “ஏதோ வெடி சத்தம் கேட்டது. மெதுவாக பார்த்து போகவும்” என்று எச்சரித்துள்ளார். சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் ரயில் பாலத்தில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். இல்லையேல் அதிகளவில் பலியாகியிருப்பர்.

பாலத்தில் குண்டு வெடித்து மூன்று மணி நேரம் கழித்து வந்த ரயில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். ஆனால் அடுத்தநாள் பத்திரிகைகளில் “ஓடும் ரயிலுக்கு குண்டுவைப்பு. பல அப்பாவி தமிழர்கள் பலி” என்று செய்தி வெளிவந்தது. மக்களுக்காக போராடியவர்கள் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர். தாங்கள் எச்சரித்தும் தங்கள் மீது கெட்ட பெயர் உருவாக்குவதற்காக அரசு வேண்டுமென்றே ரயிலை கவிழ்த்து மக்களைப் பலியாக்கியள்ளது என்பதை தோழர் தமிழரசன் உணர்ந்து கொண்டார். இந்த உண்மையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அவர் இறக்கும்வரை மட்டுமல்ல அவர் இறந்தபின்பும் கூட இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிவரவில்லை. எந்த மக்களுக்காக தோழர் தமிழரசன் போராடினாரோ அந்த மக்களை குண்டு வைத்து கொன்றார் என்ற அவப் பெயருடனே அவர் மறைந்தார்.  மக்களை கொன்ற பயங்கரவாதி என்ற  அந்தப் பழி அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது.

உட்கோட்டை வங்கியை கொள்ளையிட சென்றபோதும் அங்கிருந்த மக்கள் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்களையும் கொள்ளையர்கள் என நினைத்து தாக்க முற்பட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் காரில் சென்றிருந்தமையினால் இலகுவாக தப்பிச் செல்லக்கூடியதாக இருந்தது. ஆனால் பொன்பரப்பி வங்கியை கொள்ளையிடச் சென்றபோது காரில் செல்லாமல் சைக்கிளில் சென்றிருந்தார்கள். இது இவர்களை தப்பி செல்லவிடாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர்களை தாக்கியவர்களுக்கு கொடுத்து விட்டது. உட்கோட்டை வங்கியை கொள்ளையிட சென்றபோது கார் டிறைவராக எமது தோழர் திணேஸ் சென்றிருந்தார். ஆதலினால் பொன்பரப்பி வங்கியை கொள்ளையிடச் செல்லும்போதும் காரைப் பயன்படுத்தும்படியும் அதற்கு டிறைவராக தானே வருவதாகவும் எமது தோழர் திணேஸ் கூறியிருக்கிறார். ஆனால் தோழர் தமிழரசனுடன் கூட இருந்த இன்னொரு தோழர் ஒருவரே “கார் வேண்டாம். சயிக்கிளில் போய் கொள்ளையடிக்கலாம்” என்று தமிழரசனை சம்மதிக்க வைத்தார். இவ்வாறு சயிக்கிளில் செல்வது என்று இவர்கள் முடிவெடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஈழத்தில் போராளிகள் சயிக்கிளில் சென்று பல கொள்ளைகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கதைகளை எமது தோழர்கள் மூலம் இவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே ஈழப் போராளிகள் போல் தாங்களும் செய்ய வேண்டும் என்ற  ஆர்வம் இவர்களுக்கு இவ்வாறான உந்துதலைக் கொடுத்திருந்தது. இரண்டாவது பொன்பரப்பி பிரதேசம் தோழர் தமிழரசனுக்கு மிகவும் பழக்கமான சொந்த பிரதேசம் ஆகும். அருகில் முந்திரிகைக்காடு இருந்ததால் கொள்ளையடித்துவிட்டு அதனுள் சென்றுவிட்டால் யாராலும் பிடிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். அதையும்விட பொன்பரப்பி வங்கியில் பணி புரிந்த ஊழியர் ஒருவரின் ஒத்துழைப்பு தோழர் தமிழரசனுக்கு கிடைத்திருக்கிறது. அவர் மூலம் உள்ளே சென்று எற்கனவே பலதடவை தோழர் தமிழரசன் வங்கியை நோட்டம் விட்டிருக்கிறார். இதனால் கொள்ளையிடும்போது வங்கியில் எந்த பிரச்சனையும் வராது என்று அதீத நம்பிக்கையை உருவாக்கிவிட்டார். தோழர் தமிழரசன் கொண்டிருந்த இந்த அதீத நம்பிக்கையே அவர் தவறாக திட்டமிடுவதற்கும் அதன் காரணமாக அவர் மரணத்திற்கும் வழி சமைத்துவிட்டது.

இங்கு நான் ஈழத்தில் நடந்த இரு கொள்ளை சம்பவங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவற்றை தோழர் தமிழரசன் கவனத்தில் எடுத்திருந்தால் பொன்பரப்பியில்; தவறு இழைத்திருக்கமாட்டார் என நம்புகிறேன். முதலாவது குரும்பசிட்டி என்னும் இடத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் நடத்திய கொள்ளை. தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அமைப்பின் பணத்தேவைக்காக குரும்பசிட்டியில் அடகு பிடிக்கும் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்தார். அவரும் அவருடைய சக போராளிகளும் கொள்ளையடித்தவிட்டு வெளியே வரும்போது அருகில் சுருட்டு சுற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கற்களால் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் வேறு வழியின்றி இரு தொழிலாளர்களை சுட்டுக் கொன்றுவிட்டே பிரபாகரன் தப்பி செல்ல முடிந்தது. அன்று அவர் தப்பி சென்றதாலே பின்னாளில் மாபெரும் போராட்டத்தை அவரால் நடத்த முடிந்தது. அதேவேளை மக்களும் இவர் ஆரம்பத்தில் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றதை பெரிய தவறாக பின்னாளில் பார்க்கவில்லை. எனவே தோழர் தமிழரசனும் தனது கையில் இருந்த அயுதங்களைப் பயன்படுத்தி தப்பி சென்றிருக்க வேண்டும். அதில் மக்கள் கொல்லப்பட்டிருந்தாலும் பின்னாளில் அவரின் அத் தவறு மக்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

இரண்டாவதாக நான் சுட்டிக்காட்ட விரும்பும் சம்பவம் தியாகி சிவகுமாரன் புத்தூரில் மேற்கொண்ட கொள்ளை முயற்சியாகும். சிவகுமாரன் ஒரு ஆரம்பகால போராளி. முதன் முதல் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட போராளியும்கூட. அதுமட்டுமல்ல ஈழத்தில் முதன் முதல் சிலை அமைத்து கௌரவிக்கப்பட்ட போராளியும் அவரே. அவர் தனது அமைப்பு தேவைக்காக யாழ்ப்பாணத்தில் புத்தூர் என்னும் இடத்தில் வங்கியை கொள்ளையிட முயன்றார். அப்போது பொலிசார் சுற்றிவழைத்துவிட்டதால் வேறு வழியின்றி சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்துவிட்டதால் அதன்பின் அவரது அமைப்பு செயலற்றுப் போய்விட்டது. எனவே இந்த இரு சம்வங்கள் மூலம் தோழர் தமிழரசன் தனது தமிழ்நாடு விடுதலைப்படையில் தன் முக்கியத்தவத்தை உணர்ந்து செயற்பட்டிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செயற்படாததால் அவர் கொல்லப்பட்டது மட்டுமன்றி அவரது தமிழ்நாடு விடுதலைப்படைக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

தோழர் தமிழரசனை தமிழக காவல்துறை சதி செய்து கொன்றுவிட்டது என்பதை நாம் சுட்டிக் காட்டும்போது “அதெப்படி பொலிசார் சட்டவிரோதமாக கொல்ல முடியும்?” என சிலர் அப்பாவித்தனமாய் கேட்கின்றார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் இங்கு சட்டத்தின் படியே ஆட்சி நடக்கிறது என்றும் அவர்கள் எமக்கு கூறுகின்றார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 ல் “ சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு பொருந்தியதன்றி வேறெந்த வகையிலும் தனி ஒருவருடைய உயிரை அல்லது உரிமையை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்று இருப்பது உண்மைதான். ஆனால் இந்த சட்டத்திற்கு விரோதமாக இந்திய அரசும் அதன் ஏவல்நாயான காவல்துறையும் தமக்கு எதிராக போராடும் புரட்சியாளர்களின் உயிரை எடுத்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1991, ஜூலை 12-ல் நேபாள் அருகிலுள்ள இந்திய பகுதியான பிலிபிட் கிராமத்திலிருந்து சீக்கியர்கள் பேருந்தொன்றில் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேருந்திலிருந்து இளம்வயது சீக்கியர்கள் 10 பேரை இறக்கினர். அவர்களை மினி பஸ்ஸில் ஏற்றிச் சென்று, மும்மூன்று பேராக வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்று போலி என்கவுண்டரில் தீர்த்துக் கட்டினர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கால்சா தீவிரவாதிகள் எனவும் போலீசாரால் சித்தரிக்கப்பட்டனர். இந்த என்கவுண்டர் அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பத்திரிகைகள் போலீஸ் தரப்பு வாதத்திலுள்ள ஓட்டைகளை வெளிக்கொண்டுவந்தன. 1992-ல் வழக்கறிஞர் ஆர்.எஸ். ஜோதி பொதுநல வழக்கு தாக்கல் செய்ததை ஏற்று, உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது நீண்டகால விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லாலு சிங் ஏப்ரல் 1, 2016-ல் தனது தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி 47 காவலர்களுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 57 பேரில் 10 பேர் விசாரணைக் காலத்திலே இறந்து போய்விட்டனர். இந்த காலதாமதமான தீர்ப்பின் மூலம் சுமார் 25 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு போலி என்கவுண்டர் மோதல் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு தன் காவல்துறை மூலம் சமூக விடுதலைக்காக போராடுபவர்களை சட்டத்திற்கு புறம்பாக மோதல் என்ற போர்வையில் கொன்று வருகிறது. இந்திய அரசானது அரசியல் சட்டத்தின்படி அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக கூறிக்கொண்ட போதிலும் அரசுக்கு எதிராக போராடும் பரட்சியாளர்களை சட்ட விரோதமாக கொன்று வருகிறது. போராடும் புரட்சியாளர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். ஆனால் இவர்கள் தானாக உருவாவதில்லை. மாறாக உருவாக்கப்படுகிறார்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் இவ்வாறு உருவாக்கப்படும் போராளிகள் எவரும் வன்முறைமீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர். இவர்களை நக்சலைட் சமூகவிரோதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் இந்திய அரசு அழைக்கிறது. ஆனால் இவர்களை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம் இவர்களை தேச பக்தர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

மேற்கண்டவற்றை நாம் சுட்டிக்காட்டினால் உடனே சிலர் வட இந்திய பொலிசார்தான் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். தமிழக அரசும் அதன் காவல்துறையும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் ஸ்கொட்லாண்ட் பொலிசாருக்கு நிகரானவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் என்று தமிழக பொலிசாருக்காக  வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்களுக்;காக தமிழக அரசும் அதன் காவல்துறையும் மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

(1) 1960 களின் இறுதியில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தின் கீழ் எழுந்த நக்சல்பாரி புரட்சி வழியில் உழைக்கும் ஏழை மக்களின் விடுதலைக்காக போராடிய கோவையைச் சேர்ந்த எல்.அப்பு என்பவரை தமிழ்நாடு காவல்துறை ரகசியமாக கொலை செய்தது. இன்றுவரை அவர் என்ன ஆனார் என்ற மர்மத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்காமலேயே இருந்து வருகிறது. இதுபோன்று 1970 முதல் 1980வரை  நாற்பதுக்கு மேற்பட்ட நக்சல்பாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தர்மபுரி வடஆற்காடு மாவட்டங்களில் தமிழக காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

(2) 1980ல் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்த கண்ணாமணி என்பவர் சேலம் பயணியர் மாளிகையில் வைத்து பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆனால் பொலிசுடனான மோதலில் இறந்ததாக வழக்கம்போல் காவல்துறை கூறியது.

(3) 1982ல் தர்மபுரி மாவட்டம் சிறியம்பட்டு கிராமத்தில் பாலன் என்ற நக்சல்பாரி தோழர்  ஆயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது 300 க்கும் மேற்பட்ட பொலிசார் எவ்வித முன்னறிவிதலும் இன்றி கைது செய்து சென்னை கொண்டு சென்றனர். பின்னர் சென்னையில் வைத்து அவரை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு அவர் தப்பி ஓட முயற்சி செய்தபோது சுட்டுக் கொன்றதாக பொய் கூறினார்கள். அவர் உடலைக்கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சாம்பலை மட்டுமே கொண்டு வந்து கொடுத்தனர்.

(4) அதே காலப் பகுதியில் வட ஆற்காடு திருப்பத்தூர் பகுதியில் நக்சல்பாரி தோழர் சீராளன் என்பவர்  பொலிசாருடனான மோதல் என்னும் பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

(5) 1993ம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் விடுதலைப்படைத் தலைவர் தோழர் நாகராசன் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர பாபுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். திண்டுக்கல் பகுதியில் ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நாகராசனை பிடித்துச்சென்று சித்திரவதை செய்து கொன்றுவிட்டு வழக்கம்போல் மோதலில் பலியானார் என காவல்துறை பொய் கூறியது.

(6) 1994 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவராக கருதப்பட்ட தோழர் லெனின் தற்செயலாக ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்தார். உடனடியாக அவரை சுற்றிவழைத்த காவல்துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு எந்தவித மருத்தவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யாமல் அவரை வேண்டுமென்றே கொன்றனர்.

(7) இதேபோன்று 1994ம் அண்டு செப்டெம்பர் மாதம் தென்னாற்காடு மாவட்டம் வடலூர் அருகே தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தோழர் சின்னத்தம்பி வெடி விபத்தில் காய மடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த பொலிசார் மருத்துவர்களின் உதவியுடன் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவரையும் வேண்டுமென்றே கொன்றனர்.

(8) 1992ம் ஆண்டு நீதிமன்ற காவலில் இருந்த தமிழர் பாசறை என்னும் அமைப்பை சேர்ந்த சந்திரன் என்னும் நபரை விசாரணை என ஜ.ஜி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தமிழக காவல்துறை பொய் கூறியது.

(9) 1997ல் ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்டது தொடர்பாக உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்த சடையன் என்பவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். ஆனால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனப் பொய்கூறி அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது தமிழக காவல்துறை.

(10) நெல்லை மாவட்டம் இராசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மச்சக்காளை. இவர் அந்தப் பகுதி விவசாயிகளுக்காகப் போராடியதால் இவரையும் அடித்துக் கொன்றது தமிழக காவல்துறை.
கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்காக போராடுபவர்களை தமிழக அரசும் அதன் காவல்துறையும் சட்டவிரோதமாக கொலை செய்து வருவதை மேலே காட்டப்பட்ட சில  உதாரணங்களில் இருந்து புரிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் இவ்வாறே தமிழக காவல்துறை சதி செய்து கொன்றது.

1945ம் ஆண்டு ஏப்பிரல் 14ம் நாள் பிறந்த தோழர் தமிழரசன் 1987ம் ஆண்டு செப்டெம்பர் 1ம் நாள்  அவரது 42வது வயதில் கொல்லப்பட்டார். 1967ம் ஆண்டு நக்சல்பாரி தலைவர் சாரும்மஜீந்தார் அவர்களின் அழைப்பை ஏற்று தனது பொறியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழுநேர போராளியாக மாறினார். அவர் 1975ம் ஆண்டு அரியலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஒருமுறை ஓரு அதிகாரி இவரிடம் “நீங்கள் ஓரு பொறியிலாளராக வாழ்க்கையை அமைத்திருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டதற்கு “என் நாட்டு மக்கள் பட்டினியிலும் வறுமையிலும் இன்னல் படும்போது நான் மட்டும் எப்படி வசதியாக நிம்மதியாக வாழ முடியும்?” என்று தோழர் தமிழரசன் பதில் அளித்துள்ளார்.

 இவ்வாறு மக்களை நேசித்த மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தோழர் தமிழரசன் 9 ஆண்டு சிறைவாசத்தின் பின் 1983ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த தோழர் தமிழரசன் தொடர்ந்தும் மக்களுக்காகவே போராடினார். அவர் தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை என்பவற்றை உருவாக்கி அவற்றுக்கு தானே தலைமைதாங்கி நடத்தினார்.

இவ்வாறான புரட்சியாளர் தோழர் தமிழரசனை கொள்ளையர் என்று சொல்லி தமிழக காவல்துறையால் கொல்லப்பட்டார். எந்தவித சமரசமும் இன்றி தமிழ்நாடு விடுதலைக்காக ஆயதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். எனவேதான் அவர் தமிழக அரசாலும் அதன் ஏவல் நாயான காவல்துறையாலும் சதி திட்டம் தீட்டி கொல்லப்ட்டார். தோழர் தமிழரசனைக் கொல்வதன்மூலம் அவர் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என தமிழக காவல்துறை நினைத்தது. ஆனால் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்களன். அவர்கள் தோழர் தமிழரசன் கண்ட கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள். இது உறுதி.